Saturday, July 14, 2012

பிரட் லீ "குட்பை'


 புயல் வேகப்பந்துவீச்சாளரான பிரட் லீ, சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்றார். 13 ஆண்டு காலமாக அசைக்க முடியாத வீரராக இருந்த இவரது ஓய்வு, ஆஸ்திரேலிய அணியில் மிகப் பெரும் வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது. 
ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பிரட் லீ, 35. இதுவரை 76 டெஸ்ட் (310 விக்.,), 221 ஒருநாள் (380 விக்.,) மற்றும் 25 "டுவென்டி-20' (28 விக்.,) போட்டிகளில் பங்கேற்றுள்ளார். கடந்த 1999ல் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமான இவர், பெரும்பாலும் காயத்தால் அவதிப்பட்டார். 
கணுக்கால் காயம், முதுகு வலி, வயிற்று வலி, முழங்கால் காயம், மற்றும் பாதத்தில் பிரச்னை என, அவ்வப்போது அவதிப்பட்டு வந்த பிரட் லீ, கடந்த 2010ல் சர்வதேச டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார்.
ஒருநாள் மற்றும் "டுவென்டி-20' போட்டிகளில் மட்டும் பங்கேற்று வந்தார். தற்போது இங்கிலாந்து சென்றுள்ள ஆஸ்திரேலிய அணியில் இடம் பெற்றிருந்தார். நான்காவது ஒருநாள் போட்டியின் போது, வலது கெண்டைக்கால் சதையில் வலி ஏற்பட, நாடு திரும்பினார். விரைவில், "டுவென்டி-20' உலக கோப்பை தொடர் துவங்கவுள்ள நிலையில், நேற்று திடீரென ஓய்வை அறிவித்தார். பாண்டிங் ஓய்வுக்கு பின், ஒருநாள் போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி திணறி வருகிறது. இப்போது பிரட் லீயும் "குட்பை' சொல்லி இருப்பது, பேரிடியாக அமைந்துள்ளது. 
ஓய்வு குறித்து பிரட் லீ கூறியது:
கிரிக்கெட் வீரர்களுக்கு எப்போது காயம் ஏற்படுகிறதோ அல்லது காயம் தொல்லையாக உள்ளதோ, அன்று முதல் கடின காலம் தான். இங்கிலாந்தில் இருந்து திரும்பிய பின் ஓய்வு குறித்து யோசித்துக் கொண்டிருந்தேன். 
ஏனெனில், காயமடைந்த நிலையில், அடுத்த இரு மாதங்களுக்கு தொடர விருப்பம் இல்லை. உடற்தகுதி மற்றும் மன ரீதியாக 100 சதவீதம் வெற்றிக்கு உதவ முடிந்தால் மட்டுமே அணியில் இருக்க வேண்டும். இல்லையெனில், அது அணயின் நலனுக்கு உகந்தது அல்ல. 
சரியான தருணம்:
இப்படிப்பட்ட, மனநிலையில் தொடர்ந்தால், அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட முடியாது. ஏதாவது ஒருநிலையில் போதும் என்று எப்போது தோன்றுகிறதோ, அப்போது உடனே முடிவெடுத்து விட வேண்டும். "டுவென்டி-20' உலக கோப்பை தொடருக்குப் பின், விடைபெறலாமா என்பது குறித்து தேர்வாளர்களுடன் விவாதித்தேன். பின், ஓய்வு பெற இதுதான்  சரியான தருணம் என்பதால் இம்முடிவை அறிவித்தேன். 
கிளார்க் சரிதான்:
ஆஸ்திரேலிய அணியின் தற்போதைய கேப்டன் மைக்கேல் கிளார்க் திறமையானவர். அணியை சிறப்பாக வழிநடத்திச் செல்லும் இவருக்கு, நல்ல அனுபவம் உள்ளது. இவருக்கும், மற்ற வீரர்களுக்கும் ஆதரவளிக்க வேண்டும். ஏனெனில், ஒரே இரவில் யாரும் "சூப்பர் ஸ்டார்களை' உருவாக்கிவிட முடியாது. 
ஐ.பி.எல்., தொடரும்:
முதல் போட்டியிலேயே சதம் அடிக்க வேண்டும், 5 விக்கெட் வீழ்த்த வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது. தற்போதுள்ள வீரர்களுக்கு பல்வேறு வழிகளில் இருந்தும் நெருக்கடி வருகிறது. சிறந்த ஆலோசனைகள் மூலம், தரமான வீரர்களை உருவாக்கலாம். கிரிக்கெட் அனுபவங்களில் இருந்து முற்றிலும் விலகிக் கொள்ள விரும்பவில்லை. இதனால், ஐ.பி.எல்., மற்றும் "பிக் பாஷ்' போட்டிகளில் தொடர்ந்து பங்கேற்பேன்.
இவ்வாறு பிரட் லீ கூறினார்.
"இரண்டாவது இன்னிங்ஸ்'
கிரிக்கெட் வாழ்க்கை குறித்து பிரட் லீ கூறுகையில்,"" வார்ன், மெக்ராத், கில்கிறிஸ்ட், ஸ்டீவ் வாக், மார்க் வாக் ஆகியோருடன் விளையாடிய காலங்கள் மறக்க முடியாதவை. இப்போது எனது வாழ்க்கையில் இரண்டாவது பாதி துவங்குகிறது. இது பெரும் எதிர்பார்ப்பையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இனி, விடுமுறை நாட்களில் வீட்டில் தான் இருப்பேன்,''என்றார்.
நழுவிய சாதனை
அதிக விக்கெட் வீழ்த்திய ஆஸ்திரேலிய பவுலர்கள் வரிசையில் வேகப்பந்து வீச்சாளர் மெக்ராத், 250 ஒரு நாள் போட்டிகளில் பங்கேற்று 381 விக்கெட் வீழ்த்தி, முதலிடத்தில் உள்ளார். இதைத் தகர்க்க, பிரட் லீக்கு (221 ஒருநாள் போட்டி, 380 விக்.,) 2 விக்கெட் மட்டுமே தேவைப்பட்டது. இந்நிலையில் திடீரென ஓய்வை அறிவித்ததால், இச்சாதனை நழுவியது.
* ஒருநாள் போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் வரிசையில் பிரட் லீ ஏழாவது இடத்தில் உள்ளார்.
பத்தாவது சிறந்த வீரர்
சர்வதேச டெஸ்ட், ஒருநாள் மற்றும் "டுவென்டி-20' என, மூன்று வித போட்டிகளையும் சேர்த்து, அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் வரிசையில் பிரட் லீ, பத்தாவது சிறந்த வீரர் (718 விக்.,) என்ற பெருமை பெற்றுள்ளார். முதல் மூன்று இடங்களில் இலங்கையின் முரளிதரன் (1347 விக்.,), ஆஸ்திரேலியாவின் வார்ன் (1001), இந்தியாவின் கும்ளே (956) உள்ளனர். 
புன்னகையில் விழும் விக்கெட்
பிரட் லீக்கு என்று ஒரு "ஸ்டைல்' <உண்டு. தனது பந்தில் எதிரணி வீரர்கள் பவுண்டரி, சிக்சர் அடித்தால், அவர்களை முகத்தை நேராக பார்த்து வெறுப்பேற்றி புன்னகை செய்வார். அடுத்து சரியான அளவில் பந்துவீசி, "அவுட்' செய்வார். விக்கெட் எடுத்தவுடன் அப்படியே அந்தரத்தில் பறந்து, ஒரு காலை உயர்த்தி மற்றொரு காலால் தொட்டு மகிழ்வது இவரது "ஸ்டைல்'.
இந்தியா மீது நேசம்
இந்தியாவை இரண்டாவது தாய்வீடாக பிரட் லீ எண்ணுகிறார். இங்கு நிறைய பொருட்களுக்கு விளம்பர "மாடலாக' உள்ளார். பிரபல பாடகி ஆஷா போன்ஸ்லேவுடன் சேர்ந்து பாடியுள்ளார். 2007ல் "மியுசிக்' என்ற அறக்கட்டளையை இந்தியாவில் துவக்கினார். வசதி குறைந்த இளைஞர்களின் இசை வளர்ச்சிக்கு உதவுவது தான், இந்த அமைப்பின் நோக்கம். 2008ல் "விக்டரி' என்ற கிரிக்கெட் தொடர்பான, இந்தி படத்திலும் சிறிய வேடத்தில் நடித்துள்ளார். ஐ.பி.எல்., போட்டிகளில் தொடர்ந்து பங்கேற்று வருகிறார். (thanks Dinamalar)

No comments:

Post a Comment