இன்று கல்விக் கண் திறந்த காமராஜர் பிறந்த தினம். இவரது காலத்தில் தான், கல்வியில் தமிழகம் அபார வளர்ச்சி பெற்றது.காமராஜர், விருதுநகரில் 1903ம் ஆண்டு ஜூலை 15ம் தேதி பிறந்தார். இவரது பெற்றோர் குமாரசாமி நாடார், சிவகாமி அம்மாள். காமராஜருக்கு ஆறு வயது இருக்கும் போது தந்தை காலமானார். இதனால் பள்ளிப் படிப்பை ஆறாம் வகுப்போடு முடித்தார். தாயின் அரவணைப்பில் வளர்ந்த அவருக்கு, சுதந்திர போராட்டத்தில் ஆர்வம் ஏற்பட்டது.
சுதந்திர போராட்ட வீரர்: 16வது வயதில் காங்கிரசில் சேர்ந்தார். ஆங்கிலேயரின் அடக்குமுறையை எதிர்த்து, சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டார். 1930ம் ஆண்டு வேதாரண்யத்தில், ராஜாஜியின் தலைமையில் உப்பு சத்தியாகிரகத்தில் கலந்து கொண்டார். கோல்கட்டா, அலிப்பூர் சிறையில் அடைக்கப்பட்டார். பல்வேறு
சுதந்திர போராட்டங்களில் கலந்து கொண்டதால், தமிழக சிறைகளிலும் இருந்தார். சிறை வாழ்க்கையின் போது, சுயமாக புத்தகங்களை படித்து அறிவை வளர்த்துக் கொண்டார்.
அரசியல் வாழ்க்கை: சுதந்திர போராட்ட வீரரும், சிறந்த பேச்சாளருமான சத்தியமூர்த்தியை, அரசியல் குருவாக ஏற்றுக் கொண்டார். 1936ம் ஆண்டு சத்தியமூர்த்தி, காமராஜரை காங்., கட்சியின் செயலளராக நியமித்தார். 1940ம் ஆண்டு சிறையிலிருக்கும் போதே, விருதுநகர் நகராட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1946-52 வரை சென்னை மாகாண காங்., தலைவராக இருந்தார். 1953ம் ஆண்டு தமிழக முதல்வராக பதவியேற்றார். அவர் முதல்வராக இருந்த காலத்தில், மதிய உணவுத்திட்டம், நீர்பாசன திட்டங்கள், தொழிற்துறை திட்டங்கள் ஆகியவற்றை நிறைவேற்றினார். மூன்று முறை முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட காமராஜர், 9 ஆண்டுகள் பதவி வகித்தார்.
“கே-பிளான்”: அகில இந்திய காங்கிரசிற்கு தலைமை வகித்த காமராஜர், பதவியை விட மக்கள் பணியும், கட்சிப் பணியுமே முக்கியம் என கருதி ஒரு திட்டத்தை வெளியிட்டார். இதன்படி கட்சியில் இளைஞர்களுக்கு பதவியை அளித்து விட்டு, மூத்த தலைவர்கள் கட்சி பணி மட்டுமே ஆற்றுவது என தெரிவித்தார். 1963ம் ஆண்டு முதல்வர் பதவியை ராஜினாமா செய்து விட்டு கட்சிப்பணியாற்ற முன் வந்தார். நேருவின் மறைவுக்குப் பிறகு, லால் பகதூர் சாஸ்திரியை பிரதமராக காமராஜர் முன்மொழிந்தார். இதை அனைவரும் ஏற்றுக் கொண்டனர். சாஸ்திரியின் திடீர் மரணத்துக்குப் பிறகு அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டது. அப்போது இவரது முயற்சியால் இந்திரா பிரதமராக்கப்பட்டார்.
மறைவு: 1975ம் ஆண்டு அக்.2ம் தேதி மகாத்மா காந்தி பிறந்த தினத்தில், காமராஜரின் உயிர் உறக்கத்திலேயே பிரிந்தது. அவரது இறப்பின் போது பையில் சிறிதளவு பணம் மட்டுமே இருந்தது. வங்கிக் கணக்கோ, சொத்தோ அவர் பெயரில் இல்லை. இறுதி வரை வாடகை வீட்டிலேயே வசித்தார். இவரது மறைவுக்குபின் 1976ம் ஆண்டு இந்திய நாட்டின் மிக உயரிய "பாரத ரத்னா' விருது காமராஜருக்கு வழங்கப்பட்டது. புனிதமான, எளிமையான வாழ்க்கையை வாழ்ந்த காமராஜருக்கு மக்கள், படிக்காத மேதை, ஏழைப்பங்காளன், கர்ம வீரர், தென்னாட்டு காந்தி, கிங் மேக்கர், பெருந்தலைவர் என்ற பட்டங்களை சூட்டி அவரை போற்றி வருகின்றனர்.
அதிகாரத்தில் குறுக்கிடாத தலைவர்: கடந்த, 1965-66ம் ஆண்டு, விருதுநகர் மேற்கு போலீஸ் நிலையத்தில், உதவி ஆய்வாளராக பணியாற்றினேன். அப்போது, தமிழக முதல்வராக, பக்தவத்சலம் இருந்தார். அகில இந்திய காங்கிரஸ் தலைவராக, காமராஜர் இருந்தார். அந்த காலத்தில், ஒரு தாலுகாவில் இருந்து, மற்றொரு தாலுகாவிற்கு அரிசி, பருப்பு எடுத்துச் செல்வது குற்றம். மீறுவோர் மீது, வழக்கு பதிந்து, சிறைக்கு அனுப்புவேன். காமராஜரின் உறவினர்கள், சிபாரிசுக்கு வருவது வழக்கம். நான் யாருடைய சிபாரிசையும் ஏற்க மாட்டேன். தொடர்ந்து இதுபோல் நடந்து கொண்டிருந்ததால் பொறுத்துக்கொள்ள முடியாத, காமராஜரின் உறவினர் சிலர், ஒரு கட்டத்தில், சென்னையில், காமராஜரிடம் நேரடியாக புகார் தெரிவித்தனர். அவரோ, "அவன் சரியாகத்தான் வேலை செய்கிறான்; நீங்கள் தலையிடாதீர்கள்' எனக் கூறி அனுப்பி வைத்தார். ஒருமுறை கூட இதுகுறித்து என்னிடம் அவர் கேட்டதில்லை. உயர்ந்த அந்தஸ்தில் இருந்த போதும், அரசு பணிகளில் குறுக்கிடாத பெருந்தலைவர் அவர். -( ஜம்புகுமாரன், எஸ்.பி., (ஓய்வு), சென்னை.(dinamalar)
No comments:
Post a Comment