புற்றுநோய் சிகிச்சையின் போது அதிகளவில் ரத்தத்தை பார்த்தேன். இதனால் தற்போது எனக்கு சிகப்பு நிறம் என்றாலே வெறுப்பாக உள்ளது என்று இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் யுவராஜ் சிங்(30). கடந்த ஆண்டு(2011) இந்திய அணி உலக கோப்பையை கைப்பற்ற முக்கிய காரணமாக இருந்தவர். இவரது சிறப்பான ஆட்டத்தை பாராட்டி, உலக கோப்பையில் தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
ஆனால் அதன்பிறகு நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட யுவராஜ் சிங், அமெரிக்காவில் சிகிச்சை பெற்று தற்போது குணமடைந்துள்ளார். இதனால் கடந்த ஒராண்டிற்கு மேலான கிரிக்கெட் போட்டிகளில் யுவராஜ் சிங் பங்கேற்க முடியவில்லை.
இந்த நிலையில் இலங்கையில் வரும் செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள உலக கோப்பை டுவென்டி20 உலக கோப்பை தொடரில் கலந்து கொள்ளும் வகையில், கிரிக்கெட் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.
யுவராஜ் சிங்கிற்கு சிகப்பு நிறம் தான் மிகவும் பிடித்த நிறம். ஆனால் தனது புற்றுநோய் பாதிப்பிற்கு பிறகு, சிகப்பு நிறம் என்றாலே வெறுப்பாகிவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது,
சிகப்பு நிறம் தான் எனக்கு பிடித்த நிறமாக இருந்தது. ஆனால் எனக்கு புற்றுநோய் சிகிச்சையின் போது, அதிகளவிலான ரத்தத்தை பார்த்தேன். இதனால் தற்போது
சிகப்பு நிறம் என்றாலே வெறுக்கிறேன். அந்த நிறத்தை பார்த்தாலே எரிச்சலாக உள்ளது.
புற்றுநோய் சிகிச்சையின் போது சுவாசிக்கவே சிரமப்பட்டேன். ஆனால் தற்போது எனது இரு நுரையீரல்கள் மூலம் நன்றாக சுவாசிக்க முடிகிறது. சிகிச்சையின் போது, வாசனையின் மூலம் என்னால் உணவுப் பொருட்களை கண்டறிய முடிந்தது. ஆனால் உட்கொள்ள முடியவில்லை. இப்போது நான் ஒரு சராசரி மனிதனாகி மாறிவிட்டேன். என்னால் சமோசா சாப்பிட முடிகிறது.
சுமார் 4 முதல் 6 மாதங்களாக நான் படுத்த படுக்கையாக கிடந்தேன். அப்போது நான் திரும்ப கிரிக்கெட் ஆடுகளத்தில் ஆட முடியும் என்று கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை. இருப்பினும் எனது உடல்நிலையில் முன்னேற்றம் தெரிந்தது. நான் புற்றுநோயில் இருந்து மீண்ட பிறகு, முதல் முறையாக கிரிக்கெட் பயிற்சியில் ஈடுபட்ட போது, எனது மனத்தில் ஏற்பட்ட மகிழ்ச்சியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.
எனது நிலையை எண்ணி நான் வருத்தப்படவில்லை. விளையாட வேண்டும் என்ற எனது விருப்பத்தை குறித்து தொடர்ந்து சிந்திக்க முடியவில்லை. பயிற்சியின் போது முதல் 2 வாரங்களுக்கு எனது உடலில் உள்ள அனைத்து தசைகளும் வலித்தது. உடலில் லேசான நடுக்கம் இருந்தது.
ஆனால் தற்போது எனது உடல்நிலையில் 50 முதல் 55 சதவீதம் தேறிவிட்டேன். எனது கண்கள் மற்றும் கைகள் இடையிலான தொடர்பு சீராக உள்ளது. ஆனால் கால்களின் அசைவு மட்டுமே மெதுவாக உள்ளது.
பந்தை என்னால் அடித்து விளையாட முடிகிறது. இதனால் இலங்கையில் நடைபெற உள்ள டுவென்டி20 உலக கோப்பை தொடருக்கு நான் தயாராகிவிடுவேன் என்ற நம்பிக்கை உள்ளது. இதற்காக தினமும் 6 மணிநேரம் கிரிக்கெட் பயிற்சியில் ஈடுபடுகிறேன்
கிரிக்கெட்டின் மீதான எனது எண்ணம் மாறிவிட்டது. எனது சிகிச்சைக்கு பிறகு நாட்டிற்காக முதல் போட்டியில் விளையாட போவதை எனது பெரிய பாக்கியமாக கருதுகிறேன் என்றார்(thanks thatstamil)
No comments:
Post a Comment